கிரண் கெர் 
பேட்டிகள்

தமிழ்நாடு, கேரளத்திலும் காலூன்றுவோம்!

ஸ்மிரிதி ஷர்மா

மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட கிரண் கெர் தொடர்ந்து இரண்டாவது முறையாக சண்டிகர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். அவரிடம் தோற்றிருப்பவர் , நான்குமுறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கும் காங்கிரஸின் மூத்த தலைவர் பவன் பன்சால். கிரண் கெர்ரிடம் உரையாடியதிலிருந்து...

மக்களவைத் தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றியடைந்திருப்பதற்கு என்ன காரணம்?

மோடிதான். நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்ல வேண்டுமென்பதுதான் அவரது நோக்கமாக இருந்தது. தேசத்தின் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்திய மோடி, நமது நாடு அனைத்திலும் முதல் இடத்தில் இருக்க வேண்டுமென கருதினார். இதை உணர்ந்துகொண்ட மக்கள் அவருக்கு முழு நம்பிக்கையுடன் வாக்களித்துள்ளனர்.

இந்தத் தேர்தல் சாதிய அரசியல் ஆதிக்கத்தைத் தாண்டி நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன?

பாஜகவை பொறுத்தவரை இந்தத் தேர்தல்,
சாதி அரசியலுக்கும் அப்பாற்பட்டது. இரண்டு முழக்கங்களை முன்வைத்து நாங்கள் தேர்தலில் போட்டியிட்டோம். தேசத்தின் பாதுகாப்பு, நாட்டின் முழுமையான வளர்ச்சி ஆகியவற்றிலிருந்து இந்தத் தேர்தலை முன்னெடுத்தோம். எதிர்க்கட்சியினர் மகாகூட்டணி என்ற பெயரில் சாதிய அடிப்படையில் வாக்குகளைப் பெற முயற்சித்தனர். ஆனால் உத்தர பிரதேசம், பீஹாரில் அவர்களுக்கு மிகக்குறைவான வெற்றியே கிடைத்தது.

நரேந்திர மோடியின் இந்த வெற்றி மிகமுக்கிய  சாதனையாகக் கருதப்படுகிறது. இது பற்றி?

தனது பணிகளில் நூறு சதவீதம் கவனம் செலுத்துபவர் நரேந்திர மோடி. பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்வில், நாட்டைவிட அவருக்கு எதுவும் முக்கியம் இல்லை. இந்தியர்களுக்குப் பெரும் நம்பிக்கையை கொடுத்திருக்கும் மோடி, பல்வேறு உலக நாடுகளின் மேடைகளில் நம் நாட்டு மக்களை, இந்தியர்களாக இருப்பதற்கு பெருமிதம்கொள்ளச் செய்கிறார். உலகத்தின்
சிறந்த நாடாக இந்தியாவை உருவாக்குவதற்கும் மோடியின் செயல்திட்டங்கள் உதவுகின்றன. இதன் விளைவை இப்போது அனைவரும் உணர்வதோடு, ஏற்றுக்கொள்ளவும் செய்கிறார்கள். முன்பைவிட உலக தலைவர்களின் மத்தியில் இந்தியாவுக்கு மதிப்பு கூடியிருக்கிறது. இதற்கு மோடியின் கடின உழைப்புதான் காரணம்.

தென்னிந்தியாவில் ஏன் இந்த மோடியின் அலை எடுபடவில்லை? இதற்கு என்ன காரணமென நினைக்கிறீர்கள்?

கர்நாடகத்தைப் பொறுத்தவரை, ஏற்கெனவே அங்கு நாங்கள் ஆட்சியைப் பிடித்திருக்கிறோம். ஆனால் தமிழகத்திலும் கேரளத்திலும் இன்னும் நாங்கள் எங்களுடைய இருப்பை உறுதிசெய்யவில்லை. எனவே மோடி மாயாஜாலம் இந்த மாநிலங்களில் எடுபடவில்லை என
சொல்வதில் அர்த்தமில்லை. எனினும், இவ்விரண்டு மாநிலங்களிலும் பாஜகவின் உறுதியான கட்டமைப்பை உருவாக்க செயலாற்றி வருகிறோம். இதற்கு சிறிது அவகாசம் எடுக்குமென்றாலும், நிச்சயம் இந்த மாநிலங்களில் காலூன்றுவோம். மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது இவற்றின் அரசியல் சூழல் முற்றிலும் மாறுபட்டது என்பதையும் பார்க்கவேண்டும்.  சமூக & பண்பாட்டுக் கூறுகளிலும் வடக்குக்கும் தெற்குக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இவையெல்லாம் இணைந்துதான் இந்த மாறுபட்ட அரசியல் சூழலை உருவாக்குகிறது. எனினும்,'அனைவருடனும் ஒன்றிணைந்த அனைவருக்குமான வளர்ச்சி' எனும் மோடியின் தாரக மந்திரத்தின்படி, இந்த இரு மாநிலங்களிலும் நாங்கள் தடம் பதிப்போம்.

ஜுன், 2019.